இசையமைப்பாளர் அனிருத் தனது நண்பர் நெல்சன் திலீப்குமார் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் விஜய் ரசிகர்களை முழு திருப்தி அடைய செய்தாலும் பொதுவான ரசிகர்களின் கவலையான விமர்சனங்களையே பெற்று வருகின்றன. இருப்பினும் பீஸ்ட் திரைப்படம் வசூலில் அடித்து நொறுக்கி வெளியான இரு தினங்களிலேயே 100 கோடியை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் இயக்குனரான நெல்சன் திலீப்குமாரை பற்றி நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான அனிருத் உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது “கடந்த 2010ஆம் ஆண்டு நெல்சன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்கினார். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் எப்படியாவது இயக்குனராக வேண்டும் என்ற நினைப்பில் ஆறு வருடங்கள் போராடினார். இதற்கிடையில் அவர் பட்ட கஷ்டங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு அவர் போராடினார். நெல்சனின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை தான் நாம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதனைத் தொடர்ந்து நெல்சனை ரசிகர்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மேலும் நெல்சனுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது பெருமையாக இருக்கிறது. இவை அனைத்தும் நெல்சனின் உழைப்பிற்கும், போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி” என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.