நேபாளத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கபட்டுள்ளது.
உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக நேபாளத்தில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதனால் மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நேபாளத்தில் 8257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 337 ஆக இருந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் அறிகுறிகள் இன்றி கொரோனா பாதிப்புடன் இருக்கின்றனர். இதனால் அதிகமாக தோற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் இது நாடு முழுவதும் பரவினால் மரணங்களை கணக்கிட முடியாத அளவுக்கு போகும் என நேபாள நாட்டு சுகாதாரத் துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் இந்த வாரத்திலிருந்து நேபாளம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் 31 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நேபாளத்தில் அவசர சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கை 1595 தான் இருக்கின்றது. இந்த நிலையில் 800,000 டோஸ் தடுப்பூசிகளை சீனா நன்கொடையாக அளித்துள்ளது. இதனை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.