நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று புறப்படும் போது ஒடுதளத்தில் இருந்து விலகி புல்தரையில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டு விமான நிலையத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இன்று காலை ஸ்ரீஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் காத்மண்டில் இருந்து நேபாள் நாட்டில் உள்ள கஞ்ச் நகருக்கு புறப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்படுவதற்கான ஓடுதளத்திற்கு வந்துள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றுள்ளது.
குறிப்பாக விமானத்தின் இடதுபக்க டையர் ஓடுதளத்தை விட்டு விலகி அருகிலுள்ள புல்தரையில் வழுவாக சிக்கி கொண்டுள்ளது. இந்த சம்பவத்தினால் விமானத்தில் இருந்த பயணிகளிடையே சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த விமானநிலைய ஊழியர்கள் விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
மேலும் இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் கூறினர் . இதனை தொடர்ந்து புல்தரையில் சிக்கிய விமானமானது மீட்பு வாகனங்களை கொண்டு பத்திரமாக மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் நேபாளில் உள்ள கஞ்ச் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.