சரக்கு ஆட்டோ- கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் சுப்பையான்பாளையத்தில் ஜெகன்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு சிவசபரி என்ற மகனும், சுஜயா ஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் ஜெகன்குமார் வாடகை கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஜெகன்குமார் தனது நண்பர்களான வேலுமணி, தமிழ்ச்செல்வன், சுரேஷ் ஆகியோருடன் கோபியில் இருந்து திங்களூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து திங்களூர் அருகே சென்றபோது எதிரில் வந்த தனியார் நிறுவன சரக்கு ஆட்டோவும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இதனால் ஆட்டோ மற்றும் காரின் முன்புறம் நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தினால் சரக்கு ஆட்டோ டிரைவரான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இந்த விபத்தில் ஜெகன்குமார், வேலுமணி, தமிழ்ச்செல்வன், சுரேஷ் ஆகியோர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தனர். அதன்பின் அவர்கள் 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.