கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பியல் பிரச்சனைகள் இருக்குமென ஆய்வின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்
உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் பல விதமான அறிகுறிகளை காட்டுகின்றது. இதனையடுத்து அன்னல்ஸ் ஆஃ நியூரோலஜி என்ற இதழ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் பாதி பேர் தலைசுற்றல், விழிப்புணர்வு குறைதல், தலைவலி, வலிப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவையின்மை கோளாறுகள், தசைவலி போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஆகியவற்றை கொண்டுள்ளனர்.
மருத்துவர்களும் பொதுமக்களும் இது குறித்து அறிந்து வைத்துக் கொள்வது அவசியம். காரணம் கொரோனா தொற்று தொடக்கத்தில் காய்ச்சல், இருமல் அல்லது சுவாச பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கு முன்பாகவே நரம்பியல் அறிகுறிகள் இருக்கலாம் என ஆய்வின் முன்னணி ஆசிரியர் தெரிவித்துள்ளார். நடத்தப்பட்ட பகுப்பாய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்படும் வெவ்வேறு நரம்பியல் நிலை மற்றும் அதனை கண்டறியும் வழி முறை குறித்து விவரிக்கின்றனர். அவர்களது ஆய்வின்படி இந்த தோற்று முதுகெலும்பு நரம்புகள், மூளை, தசைகள் என அனைத்து நரம்பு மண்டலங்களையும் பாதிக்கக்கூடும்.
ஆக்சிஜன் பற்றாக்குறையினாலும் அல்லது பக்கவாதம் ஏற்படுத்தும் உறைதல் கோளாறுகளாலும் மூளை பாதிக்கப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மூளை, மெனிங்கேஸ் (நரம்பு மண்டலத்தின் பல பகுதிகளை இணைக்கும் ஒரு திசு) மற்றும் மண்டைக்கு அதிர்ச்சி உறிஞ்சியாக இருக்கும் செரிப்ரோஸ்பைனல் திரவம் போன்றவற்றில் நேரடியாக தொற்றை ஏற்படுத்த முடியும் என அவர்கள் கூறினர். அதோடு தொற்றை எதிர்க்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்விளைவு நரம்பு மற்றும் மூளையை சேதப்படுத்தும் அழற்சியை ஏற்படுத்தி விடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.