ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் ஒருவர் கிரிக்கெட் வீரர் தோனிக்காக அன்பு பரிசு ஒன்றை தன் கைகளாலேயே தயார் செய்துள்ளார்.
நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. இவரும் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னாவும் கடந்த வாரத்தில் தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இவர்களது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், பலரும் இவர்களது விளையாட்டு நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து புகழாரம் சூட்டி வந்தனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்த நெசவாளர் அப்புசாமி என்பவர் கைத்தறி நெசவு மூலம் தோனி தன் மகள் உடன் இருப்பது போன்ற படத்தை போர்வையில் வடிவமைத்து அசத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவிக்கையில், தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உடனே அவருக்கு பரிசு கொடுப்பதற்காக இந்த போர்வையை தயாரித்தேன். விரைவில் தோனியை சந்தித்து அவரிடம் இந்த போர்வையை கொடுப்பதே என்னுடைய விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.