மலேசியா நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 பிரதமர்கள் மாறியுள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதியதாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் மலேசியா நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் என்னும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது.
இந்த தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிம் தலைமையிலான சீர்திருத்தக் கூட்டணி 83 இடங்களைப் பிடித்துள்ளது. இதனை அடுத்து முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி கட்சி யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு 73 இடங்களை பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து மலேசியாவில் சுதந்திரம் பெற்றதிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து வந்த ஐக்கிய மலாய் தேசிய கூட்டணி வெறும் 3௦ இடங்களை பிடித்து படுதோல்வியை தழுவியுள்ளது. இங்கு ஆட்சி அமைப்பதற்கு 112 இடங்கள் தேவை என்பதால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனவே புதிய அரசை அமைப்பதில் மலேசியா நாட்டில் குழப்பம் நீடிக்கின்றது. அதேபோல் ஆதரவை பெறுவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று அன்வர் மற்றும் முகைதீன் ஆகிய இருவருமே கூறியுள்ளனர்.