கன்னியாகுமரியில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு பயணிகள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து பயணம் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு ஊரங்கில் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி 23 மாவட்டங்களில் நேற்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திலும், வெளிமாவட்ட பகுதிகளுக்கும் காலை 6 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பணிமனைகளில் இருந்தும் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளித்து பேருந்து நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து காலை 6 மணி முதல் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயங்கியது. வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்ட பகுதிகளான திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி, பாபநாசம், ராமேசுவரம், மதுரை, குமுளி போன்ற பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டலத்தில் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டது.
இவ்வாறு மொத்தம் 760 பேருந்துகள் உள்ள நிலையில் முதல் நாளான நேற்று 600 பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் பேருந்துகளில் காலை முதல் மதியம் வரை அதிக அளவு பயணிகள் இல்லாமல் பயணம் மேற்கொள்ளப்பட்டது. எனவே 3 பேர் அமரும் இருக்கையில் 2பேரும், 2 பேர் அமரும் இருக்கையில் ஒருவரும் அமர்ந்து சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி பயணிகள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் மற்றும் கண்டக்டர் மூலம் கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தும் பயணம் செய்தனர். இதேபோன்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. குறிப்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் பணிமனை மூலம் சென்னை, வேலூர், திருத்தணி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு 13 பேருந்துகளும் இயக்கப்பட்டது. கன்னியாகுமரி பணிமனை மூலம் சென்னை, வேலூர் ஆகிய பகுதிகளுக்கு 7 பேருந்துகளும், மார்த்தாண்டம் பணிமனை மூலம் சென்னை, வேலூர் ஆகிய பகுதிகளுக்கு 10 பேருந்துகளும், திருவனந்தபுரம் பணிமனை மூலம் மார்த்தாண்டத்தில் இருந்து வேலூர் சென்னை ஆகிய பகுதிகளுக்கு 8 பேருந்துகளும் என 38 பேருந்துகள் இயக்கப்பட்டது.
இந்தப் பேருந்துகள் நேற்று காலையில் இருந்து அதிக கூட்டம் இன்றி பயணிகள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் இயங்கியது. இவ்வாறு மொத்தம் குமரி மாவட்டத்திற்கும், வெளிமாவட்ட பகுதிகளுக்கும் 638 பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதல் எல்லா சாலைகளிலும் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் ஆகியவற்றின் காரணமாக நகரின் சாலைகள் பலவற்றில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததாலும், சீரமைப்பு பணி முடியாததாலும் பல இடங்களில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதேபோன்று குளச்சல், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டது.