தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் (சிஏஏ) திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு நிறைவேற்றியது. அதில் இஸ்லாமியர்கள், இலங்கை மக்களுக்கான குடியுரிமை சம்பந்தமாக அவர்களை சேர்க்காமல் விலக்களிக்கப்பட்டது இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்லி ஷாகின்பாக், தமிழகத்தில் வண்ணாரப்பேட்டை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. என்பிஆர், சிஏஏவுக்கு எதிராக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், புதுச்சேரி, மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.
அந்த வரிசையில் டெல்லி மாநில அரசும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் என்பிஆர் அமல்படுத்தக்கூடாது எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் என்பிஆர் மற்றும் என்ஆர்சியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.