டெல்லியில் நிபந்தனைகளுக்கு பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது.
அதன்படி பல்வேறு மாநிலங்களவை அங்கிருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி அளித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பேருந்துகளில் 20 பேர், ஆட்டோவில் ஒருவர், டாக்ஸியில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கான தடை தொடரும் என்றும், டெல்லியில் உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை தொடங்கலாம் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அவசியமின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சிக்காக விளையாட்டு அரங்குகள் திறக்கலாம், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் டெல்லியில் 100% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.