சொந்த வீடு என்பது பலரது கனவாக இருக்கிறது. அவ்வாறான லட்சிய கனவை இந்த 2021 முதல் நிறைவேற்றுவதற்கான ஒரு சிறு யோசனை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் இந்திய மக்களுக்கு மலிவான விலையில் சொந்த வீட்டை ஏற்படுத்தக்கூடிய திட்டமாகும். வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கிய சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க மத்திய அரசால் இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி, இந்திய நாட்டில் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நபர்களுக்கும், மிகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்ப நபர்களுக்கும் வீடு கட்டுவதற்கான கடன்களுக்கான வட்டி மானியங்களை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் அனைவரையும் சென்றடையும் விதமாக நகரம், கிராமம் என தனித்தனியாக PmayUrban மற்றும் Pmaygramin என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
இத்திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட கூற்றுப்படி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு தகுதி பெற்றவர்களாக நீங்கள் இருந்தால், http:// pmaymis. Gov. in என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று, மெயின் மெனுவிற்கு கீழ் இருக்கும் Citizen Assesment என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களுக்கான விண்ணப்பதாரர் வகையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன்பின், ஆதார், வங்கிக் கணக்கு விபரங்கள், தற்போது இருக்கக்கூடிய வீட்டு முகவரி என தனிப்பட்ட விபரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யவேண்டும்.
பூர்த்திசெய்து சமர்பித்த பின், கேப்ட்சா குறியீடு வரும். அவற்றையும் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.
சமர்ப்பித்த பின்னர் நீங்கள் விண்ணப்பித்த படிவத்தை சரிபார்க்க TrackYour Assesement Status என்ற ஆப்ஷனில் சென்று எப்போது வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் அல்லது அதற்கான வசதியை பெறாதவர்கள் மாநில அரசுகளால் நடத்தப்படும் பொது இ-சேவை மையத்துக்கு சென்று ஜிஎஸ்டி + ரூபாய் 25 கட்டணம் கொடுத்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.