Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அருமையான யோசனை…. இனி நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டாம்… காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு….!!

முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு புதிய யுத்தியை போக்குவரத்து காவல்துறையினர் கையாண்டுள்ளனர்

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சக்கர வாகனம் வரிசையாக நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் வரும்பொழுது அடிக்கடி நெரிசலில் சிக்கும் நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் புதிய யுக்தி ஒன்றை கையாண்டு வருகின்றனர். அவ்வகையில்,

முக்கிய சாலைகளில் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தும் சமயத்தில் ஒவ்வொரு மாதமும் இரட்டைப் படையில் வரும் தேதிகளில் வாகனத்தை சாலையின் இடது புறமும் ஒற்றைப்படையில் வரும் தேதிகளில் வாகனத்தை சாலையின் வலது புறமும் நிறுத்துமாறு இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கூறியபொழுது, “முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் முயற்சியின் முதற்கட்டமாக திண்டுக்கல் பழனி சாலையில் இருக்கும் வாணிவிலாஸ் சிக்னல் முதல் கல்லறை தோட்டம் வரை சாலையில் இரண்டு பக்கங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை தேதியின் அடிப்படையில் ஒரே பக்கமாக நிறுத்துவதற்கு வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு செய்வதனால் ஒரு புறம் மட்டுமே வாகனம் நிறுத்தப்பட்டு மறுபுறம் நெரிசல் இன்றி இருப்பதால் சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமம் இல்லாமல் செல்ல முடியும். அதோடு தினமும் சாலையில் முறையாக இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணித்து வருவதோடு இதுகுறித்து அறிவிப்பு பலகையும் சாலையில் வைத்துள்ளோம்” என கூறினார். காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Categories

Tech |