புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுகருணாகரசேரி சிவன் கோவில் தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குளியலறையில் குளித்து விட்டு வருவதாக சென்ற மோனிஷா வாந்தி எடுத்ததை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்து, அவரிடம் என்னவென்று வினவியுள்ளார். அதற்கு மோனிஷா தனக்கு வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக தன் கணவரிடம் கூறி இருக்கிறார்.
இதனையடுத்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மோனிஷாவை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல்மோனிஷா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சோமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது கடந்த மாதம் தான் மோனிஷாவிற்கு திருமணம் நடந்தது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.