டிக்டாக்கின் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் தரணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா மற்றும் பிரியதர்ஷினி என்ற 2 மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் முனியாண்டி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தரணி கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 11ஆம் வகுப்பு படித்துவிட்டு கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்த பிரியதர்ஷினி டிக் டாக் மூலம் அறிமுகமான ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குருநாதன் என்பவருடன் பழகி வந்துள்ளார். இதனை அடுத்து திருப்பதி கோவிலுக்கு தரணி தனது குடும்பத்தினருடன் சென்ற போது அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் குருநாதன் வீட்டிற்கு சென்று அனைவரும் தங்கியுள்ளனர்.
அப்போது தரணியின் மூத்த மகளான ஸ்வேதா குருநாதனின் அண்ணனான அருண் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். அதோடு இவரது இரண்டாவது மகளான பிரியதர்ஷினி என்பவரும் குருநாதனே காதலித்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரியதர்ஷினிக்கும் குரு நாதனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த பிரியதர்ஷினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தரணி சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.