காணாமல் போன புது மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் முத்துக்குமார் என்ற தேங்காய் வெட்டும் தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முத்துக்குமாருக்கு வளர்மதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற முத்துக்குமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் உடனடியாக உறவினர்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன முத்துக்குமாரை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கால்வாய் தண்ணீரில் முத்துக்குமார் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்துள்ளனரா என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.