பிரிட்டன் அமைச்சர்கள் ஆங்கில கால்வாய் வழியாக தங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயரும் மக்களை அல்பேனியாவிற்கு அனுப்ப திட்டம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாயை கடந்து படகு வழியே உயிரை பணையம் வைத்து புலம்பெயர்ந்த மக்கள் பிரிட்டன் நாட்டிற்குள் புகுந்து வருகிறார்கள். இதனை தடுப்பதற்காக உள்துறை அலுவலகம் பல முயற்சிகளை மேற்கொண்டும், அவர்களை தடுக்க முடியவில்லை. பிரான்ஸிலிருந்து வரும் புலம்பெயர்ந்த மக்களை தடுப்பதற்காக அந்நாட்டு அரசுக்கு பணம் கொடுக்கப்பட்டது.
எனினும் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களை மொத்தமாக தடுக்கவில்லை. கடந்த வியாழக்கிழமை அன்று மட்டும் சுமார் 1185 நபர்கள் பிரிட்டனுக்குள் நுழைந்திருக்கிறார்கள். இதனால், பிரிட்டன் அரசு கடும் கோபமடைந்துள்ளது. உள்துறை செயலரான ப்ரீத்தி பட்டேல் கடந்த வாரத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை கட்டாயமாக தடுப்பேன் என்று உறுதி கூறியிருந்தார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைந்து வரும் புலம்பெயர்ந்த மக்களை, அல்பேனியாவில் தங்க வைப்பதற்காக அந்நாட்டில் ஒரு புகலிடக் கோரிக்கை மையம் உருவாக்குவது குறித்து பிரிட்டன் அமைச்சர்கள் திட்டம் மேற்கொண்டு வருகிறார்கள்.