கனடா நாட்டின் எல்லைப் பகுதியில் பணியாற்றுபவர்கள் பணி நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளதால் எல்லைகளை திறப்பதில் பிரச்சனை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கனடா நாட்டின் எல்லை பணியாளர்கள் சேவை ஏஜென்சியில் சுமார் 8500 பணியாளர்கள் உள்ளார்கள். இதில் இரு யூனியன்களில் அதிகமான பணியாளர்கள் சேர்ந்து பணி நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். தற்போது கனடா அரசு அமெரிக்க நாட்டுடனான எல்லைகளை திறப்பதற்கு முடிவெடுத்திருக்கிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி எல்லை பணியாளர்கள் பல கோரிக்கைகளுக்காக பணி நிறுத்தத்தை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், குறைந்த அளவிலான மக்கள் தான் எல்லையை கடந்திருக்கிறார்கள். எனினும் தீவிர சோதனைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், எல்லை பாதுகாப்பு படையினருக்கு இந்த வருடம் கடினமான பணி இருந்திருக்கிறது. எனவே, அவர்களது கோரிக்கைகள் ஆலோசிக்கப்படவுள்ளது. எல்லை பகுதியை திறப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கருதுகிறேன் என கூறியிருக்கிறார்.