ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இன்வெஸ்ட் ராஜஸ்தான் உச்சி மாநாட்டில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கௌதம் அதானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் அதானி குழுமம் ஏற்கனவே அதிக அளவில் முதலீடு செய்துள்ள நிலையில், மீண்டும் 65 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இங்கு ஏற்கனவே அதான் குழுமத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் இருக்கிறது. இதனுடன் சேர்ந்து 10,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய மின் உற்பத்தி திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.
இதற்காக ரூபாய் 50,000 கோடி முதலீடு செய்யப்படும். அதன் பிறகு அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் ஆலைகள் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால் ரூ. 7 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் சிமெண்ட் உற்பத்தியானது இரு மடங்காக பெருகும். இதனையடுத்து ஜெய்ப்பூர் விமான நிலைய விரிவாக்க பணிகளும் நடைபெற இருக்கிறது. இதற்காக ரூபாய் 8000 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது.
இதைத்தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டங்கள் அனைத்தும் அடுத்த 5 அல்லது 6 வருடங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த திட்டங்களுக்காக மொத்தமாக ரூ. 65 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்பட இருப்பதால், 40000 பேருக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.