ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு பரவத்தொடங்கியதால் இங்கிலாந்து அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அந்த புதிய வகை மாறுபாடு, இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹாங்காங் நாடுகளிலும் பரவ தொடங்கியிருக்கிறது.
தற்போது, அந்த வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், இத்தாலி மற்றும் ஜெர்மன் நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இங்கிலாந்து அரசு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இது தொடர்பில் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருப்பதாவது, புதிய வகை வைரஸ் மாறுபாடு இரண்டு நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம். இந்த வைரஸை, பரவ விடாமல் தடுப்பதற்கும், நம் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். எங்கள் நாட்டிற்கு வரும் அனைத்து மக்களும் இரண்டாம் நாள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பரிசோதனையில் தங்களுக்கு தொற்று இல்லை என்று தெரியும் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள். ஒமிக்ரோன் வைரஸ் தொற்று கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களோடு தொடர்பில் இருந்த நபர்கள், தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
பயணத்தின் போதும், பிற இடங்களுக்கு செல்லும் போதும், கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் இன்றிலிருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்.