கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகளை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி கண்டறிந்துள்ளது
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல நாடுகளில் வைரஸ் குறித்த ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆய்வின் முடிவிலும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி நடத்திய ஆய்வு ஒன்றில் கொரோனா தொற்றுக்கு இருக்கும் புதிய அறிகுறிகளைக் கண்டு பிடித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும் என சிடிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. புதிதாய் சிடிசி கண்டுபிடித்த அறிகுறிகள்,
- காரணமின்றி குளிர்வது போன்ற உணர்வு
- வேலை செய்யாத நேரமும் கடுமையான தசை வலி ஏற்படுதல்
- காரணமின்றி குளிர்ச்சியுடன் உடல் நடுங்க ஆரம்பித்தல்
- திடீரென ஏற்படும் தலைவலி
- வாசனை மற்றும் சுவை உணர்வு குறைதல்
இந்த அறிகுறிகள் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் இடம் பெறவில்லை. காய்ச்சல், வரட்டு இருமல், உடல் வலி, மூக்கடைப்பு, உடல் சோர்வு, தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு போன்றவை கொரோனா தொற்றின் அறிகுறிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. பொதுவாக தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இருக்கும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் சிடிசி கூறுகின்றது. அதேநேரம் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அறிகுறிகள் மட்டுமே இருக்கும் என சொல்ல முடியாது என்றும் சந்தேகம் கொண்ட நபர்கள் மருத்துவமனையில் சோதித்து தெளிவு பெறவேண்டும் எனவும் சிடிசி விளக்கமளித்துள்ளது.