ஆக்லாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் மீண்டும் 7 நாட்களுக்கு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால் நியூசிலாந்து கொரோனாவை சாதுரியமாக சமாளித்து வெற்றியடைந்துள்ளது. ஏனென்றால் அந்நாட்டில் இதுவரை கொரோனாவால் 2000 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் தற்போது 3 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு எங்கிருந்து தொற்று பரவியது என்பதை சுகாதாரத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தொற்று பாதிக்கப்பட்ட மூவரும் கடந்த சில நாட்களாக பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
ஆகையால் நகரில் தொற்று பரவாமல் இருக்க 7 நாட்களுக்கு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். இதனால், அவசியமான தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் அனுமதிக்கப்படுவார்கள். விசேஷ நிகழ்ச்சியில் கூடும் பொது மக்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல பொது இடங்கள் மூடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தால் நாட்டில் மீண்டும் பொருளாதார சரிவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.