இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்றினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தினால் பலர் வேலையை இழந்து தவித்தனர். தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து இருந்தாலும், வைரஸ் தொற்று முழுமையாக நீங்கவில்லை. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸின் உருமாறிய தொற்றான XBB வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பான கிஷியாத் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றானது தமிழகம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் தாக்கத்தினால் நாடு முழுவதும் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக 175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மேற்குவங்க மாநிலத்தில் 103 பேர் உருமாறிய வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் தற்போது உருமாறிய வைரஸ் தொற்றின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதால் மீண்டும் பொது முடக்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தற்போது பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.