“உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தின் மூலம் தி.மு.க வின் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து மனுவை பெற்று வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் “உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தை அறிவித்து 100 நாட்களுக்குள் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுள்ளார்.
இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களை சந்தித்து ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றிருக்கிறார். இந்நிலையில் நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளார். அதோடு சென்னை பூந்தமல்லி, நசரத்பேட்டை போன்ற பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மு.க.ஸ்டாலின் மனுக்களை பெறவிருக்கிறார். அதன் பின் பிப்ரவரி 1 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.