புத்தாண்டில் விபத்துக்குள்ளான பள்ளி மாணவன் 5 நாள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை அடுத்த செங்கத்துறையில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் சூலூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனது நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தியை சொல்ல கடந்த ஒன்றாம் தேதி சங்கர் பொன்ராஜ் ஆகியோர் வீட்டிற்கு சென்றுள்ளார் ரஞ்சித்.
பின்னர் புத்தாண்டை சிறப்பிக்க சங்கரின் இருசக்கர வாகனத்தில் 3 பேரும் காடம்பாடி நோக்கி பயணம் மேற்கொண்டனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய அவர்கள் வாகனத்திலிருந்து கீழே விழுந்தனர்.
இதில் சங்கர், பொன்ராஜ் ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பிக்க, ரஞ்சித்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாட்களாக தொடர் சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.