சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனை கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன்பிறகு மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொங்கல் பரிசு பெட்டகங்களை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி இலவசம்.
இந்த கண்காட்சியில் மூலிகை பொடிகள், கடலை மிட்டாய், தேன், இயற்கை உரங்கள், மரச் சிற்பங்கள், ஆயத்த ஆடைகள், பரிசுப் பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், செயற்கை ஆபரணங்கள், மிளகு, காபி பொடி, பொம்மைகள், பனை ஓலை பொருட்கள், கைவினைப் பொருட்கள், கண்ணாடி ஓவியங்கள், பருத்தி புடவைகள், பட்டு, கால் மிதியடிகள், சுடுமண் சிற்பங்கள், சத்துமாவு, நாட்டுச் சர்க்கரை, வீட்டு உபயோக பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் முந்திரிப்பருப்பு வகைகள் போன்ற ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சள் பை பயன்படுத்தும் விழிப்புணர்வு அரங்கம் மற்றும் சுவையான உணவு அரங்கமும் கண்காட்சியில் அமைந்துள்ளது.