புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஹோட்டல்களிலும் டிசம்பர் 31-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டப்படும். இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தடை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த அறிக்கையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கடற்கரை பகுதிகள், ஓட்டல்கள், லாட்ஜுகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட கூடாது எனவும், இதனை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறை சார்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்கமாக புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் எந்தவித மத வழிபாடுகளுக்கும் தடை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவல்துறை விதித்த தடைகளை மீறி நள்ளிரவு நேரங்களில் சாலைகளில் கேக் வெட்டி கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீதும், இருசக்கர வாகனங்களில் ரேஸ் செல்பவர்கள் மீதும் காவல் துறை சார்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.