அரை இறுதியில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். மார்ட்டின் கப்தில் 1ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய வில்லியம்சன் மற்றும் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறிது நேரம் தாக்கு பிடித்த நிலையில் நிக்கோல்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அனுபவ வீரர் ராஸ் டெய்லர் – வில்லியம்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. சிறப்பாக ஆடிய வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்தது. மழை காரணமாக ஆட்டம் நாளை (இன்று) 3 மணிக்கு நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து அணியில் நேற்று களத்தில் இருந்த ராஸ் டெய்லரும், டாம் லேதம் 3 களமிறங்கினர். ராஸ் டெய்லர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 239 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுலும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 1 ரன்னில் மேட் ஹெண்ரி வீசிய 2-வது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து வந்த கேப்டன் கோலியும் 1 ரன்னில் ட்ரெண்ட் போல்ட் வீசிய 3-வது ஓவரில் எல்.பி. டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். கேஎல் ராகுலும் மேட் ஹெண்ரி வீசிய 4-வது ஓவரில்1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 5 ரன்களில் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் 3 ரன்களில் வெளியேறினார். இதனால் முதல் 10 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டை இழந்தது. இதையடுத்து ரிஷப் பண்ட்டும், ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடினர்.
பொறுப்பாக ஆடி வந்த பண்ட் மிட்செல் சாண்ட்னர் ஓவரில் தூக்கி அடிக்க முயன்று 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பொறுமையை இழந்த பாண்டியாவும் மிட்செல் சாண்ட்னர் ஓவரில் பெரிய சாட் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். இந்திய அணி 30.3 ஓவரில் 6 விக்கெட் இழந்து 92 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் தோனியும் –ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுமையாக ஆடினர்.
ஒரு பக்கம் தோனி கம்பேனி கொடுக்க ஜடேஜா தேவையான நேரங்களில் பவுண்டரியும், சிக்சரும் விளாசினார். சிறப்பாக ஆடிய ஜடேஜா அரை சதம் அடித்தார். இதனால் இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் ஒரு நம்பிக்கை எழுந்தது. அதன் பிறகு ஜடேஜா 77 (59) ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் 2 ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது.
பெர்குசன் வீசிய முதல் பந்தை தோனி சிக்ஸர் அடித்தார். 3வது பந்தில் 2 ரன்கள் எடுக்க ஓடிய போது மார்ட்டின் கப்தில் சரியாக ஸ்டெம்பை எறிந்தார். இதனால் தோனி 50 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது அரங்கமே அமைதியில் உறைந்து போனது. இந்திய அணிக்கு தோல்வி உறுதியானது.
இறுதியில் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இந்திய அணி 221 ரன்கள் குவித்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிறப்பாக வீசி 3 விக்கெட் வீழ்த்திய நியூசி அணியின் மேட் ஹென்றி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.