Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய பந்துவீச்சில் 235 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து XI!

இந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து லெவன் அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் தொடருக்கு பின் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அதற்கு முன்னதாக நியூசிலாந்து லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிவருகிறது. இதில், நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி 101 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் ஆட்டநாளில் நியூசிலாந்து லெவன் அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், அந்த அணி 74.2 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Shami

ஹென்ரி கூப்பர் 40, ரச்சின் ரவிந்திரா 34, டார்ல் மிட்சல் 32, டாம் ப்ரூஸ் 31 ரன்கள் அடித்தனர். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், பும்ரா, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிவரும் இந்திய அணி இன்று இரண்டாம் ஆட்டநாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா 35 ரன்களுடனும், மயாங்க் அகர்வால் 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளனர்.

Categories

Tech |