இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில்,
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது. தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் தாக்கம் குறைந்தபாடில்லை.
இதனிடையே இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி பரவியது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியினை தந்தது. இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில் இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது என ஐசிஎம்ஆர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எந்த ஒரு ஆய்வையும் நடத்தவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.