நியூசிலாந்தில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி வர வாய்ப்பிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவில் 8.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், “கடலோரம் வசிப்பவர்கள் நிலநடுக்கத்தை உணராவிட்டாலும் வீட்டிற்குள் யாரும் இருக்க வேண்டாம். ஏனென்றால் சுனாமி வருவதற்கு வாய்ப்பிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அங்கு சுனாமி எச்சரிக்கை ஒலியும் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், நியூசிலாந்தில் இன்று காலை 8.28 மணிக்கு கடற்கரையிலிருந்து சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது. மேலும் நியூசிலாந்தின் ஆக்லாந்து, பே ஆப் பிளண்டி போன்ற பகுதிகளில் 8 மணி நேரத்திற்குள் தொடர்ந்து மூன்று முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.