பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்த நியூசிலாந்து அணி மீது ஐசிசி -யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது .
கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் சென்ற நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்க இருந்தது.ஆனால் போட்டி தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து அணி அறிவித்தது. நியூசிலாந்து அணி தொடரை திடீரென ரத்து செய்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகுந்த கோபமடைந்து உள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தலைவரும் , முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா கூறும்போது , “நியூசிலாந்து அணி எடுத்த முடிவு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. பாதுகாப்பு மிரட்டல் தொடர்பாக போட்டியில் விளையாடாமல் வெளியேறியது எங்களுக்கும்,ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தது .மேலும் நியூசிலாந்து அணி தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்துள்ளது . போட்டியின்போது பலத்த பாதுகாப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்தது மேலும் எங்கள் நாட்டு பிரதமர் இம்ரான் கானும் இதுகுறித்து நியூசிலாந்து அரசிடம் பேசியுள்ளார்.
மேலும் நியூசிலாந்து அணியின் பாதுகாப்பில் எந்த ஒரு குறைபாடும் இல்லை என விளக்கினோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார் . இதனிடையே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில்,” நியூசிலாந்தின் இந்த முடிவு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது “என்று கூறினார் .இதனிடையே தொடரை விளையாடாமல் ரத்து செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மீது ஐசிசி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.