நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் தொடர்ச்சியாக தங்களது முழு முயற்சியையும் செலுத்தி பாதிப்பை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.
ஆரம்ப காலகட்டத்தில் கொரோனாவின் பிடியில் சிக்கியிருந்த இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கூட தற்போது அதிலிருந்து மீண்டு விட்டது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அதன் பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில் வியட்நாம் நாடு கொரோனா பாதிப்பு இல்லாத நாடாகவும், ஒரு உயிர் கூட போகாமல் கொரோனாவை விரட்டி உள்ளதாகவும் சமீபத்தில் பதிவு செய்தது.
அதேபோல் நியூசிலாந்து நாடும் சில மாதங்களுக்கு முன்பே தங்களது நாட்டில் கொரோனா இல்லை என தெரிவித்தது. ஆனால் சிலநாட்களிலேயே இரண்டு பேருக்கு பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாதிப்பு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார்.