பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகன்ட் சிங்கிள் என பாடல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை சரியாக 6 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் கோலாகல இசை வெளியீட்டு விழா தொடங்கியுள்ளது. ஆனால் ரசிகர்கள் மதியம் 2 மணிக்கே வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு மற்றும் பட குழுவினர் அனைவருமே வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்காரணமாக ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவின்போது ரசிகர்கள் நுழைவு வாயிலில் கூட்டமாக நுழைந்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் காவல்துறையினரை தள்ளிவிட்டு உள்ளே நுழைகிறார்கள். இதனால் காவல்துறை அதிகாரிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் காவல்துறையினரை ரசிகர்கள் தள்ளிவிட்டு உள்ளே நுழையும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.