புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே உலுக்கியது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான பாலகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய 3 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்திய விமானங்கள் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி குண்டுவீசி பதில் தாக்குதல் நடத்தியது.
புல்வாமா தாக்குதல் குறித்து என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவனுக்கு உதவிய ஷாகிர் பஷீர் மேக்ரி கைது செய்யப்பட்டுள்ளான். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகன எண்ணை கொண்டு குற்றவாளி ஷாகிர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு சமயங்களில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பணம் ஆகியவற்றை சேகரித்து வழங்கியதை அவன் ஒப்புக்கொண்டது தெரியவந்தது.