வீடு புகுந்து மர்ம நபர்கள் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பாத்திமா நகரில் சாதிக் அலி-ஹாஜா நாச்சியார் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் சாதிக் அலி-ஹாஜா நாச்சியார் இருவரும் சோழபுரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கல் நாயக்கன் பேட்டையிலும், பந்தநல்லூரிலும் உறவினர் குடிபோகும் நிகழ்ச்சிக்கு இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சாதிக் அலி வீட்டின் முன்பக்க கேட் பூட்டப்பட்ட நிலையில் நிலையில் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் நிஜாம் அவருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சாதிக் அலி தன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பல பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.