தென் ஆப்பிரிக்காவில் இன்று முதல் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் தென் ஆப்பிரிக்காவில் சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த ஏழு நாட்களாக மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அங்கு புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 4,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.65 மில்லியனாக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்க அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் இன்றைய நிலவரப்படி 9 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தென்னாபிரிக்காவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அந்த நாட்டின் அதிபர் சிரில் ரமாஃபோசா தகவல் தெரிவித்துள்ளார். அதேசமயம் அந்த ஊரடங்கானது இரவு 11 மணியில் இருந்து காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.