இரவு நேர ஊரடங்கால் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து தங்களது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியதன் காரணமாக தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து மற்ற ஊர்களுக்கு பஸ்கள் எத்தனை மணி வரை இயக்கப்படும் என்ற தகவலை ஊரடங்கிற்க்கு முன்தினமே போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் ரயில் பயணங்களில் இருந்து வந்தவர்கள் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்துள்ளனர்.
அதனால் அவர்களில் பலர் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். மேலும் சிலர் நடந்தே தங்களுடைய இருப்பிடங்களுக்கு செல்ல முயன்றுள்ளனர். மேலும் ஹோட்டல்கள், டீக்கடை போன்றவை இல்லாததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதேபோன்று பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.