தூக்கம் என்பது நமது அன்றாட ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தேவை. தூக்கமின்மையால் மன அழுத்தம் முதல் இதயநோய்கள் வரை உடலில் பல்வேறு பாதிப்புகள் வரிசை கட்டும். அதாவது நாள்பட்ட தூக்கமின்மையானது உடலில் தலைமுதல் கால் வரை பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்
தூக்கமின்மையால் மூளைக்கு தேவையான ஓய்வு கிடைக்காமால் போகிறது . இதன் காரணமாக மூளையின் செயல்பாடுகள் குறைந்து எதிலும் நாட்டமில்லாத போக்கு, ஞாபக சக்தி குறைதல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இந்த நிலை தொடர்ந்தால் விரைவிலேயே மூளையின் செயல்பாடு குறையும் அபாயம் அதிகம்.
இரவு முழுமையாக தூங்காமல் இருப்பதனால் சருமம் சார்ந்த கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதிக நேரம் இரவில் கண் விழித்து இருப்பதனால். முக அழகு குறைந்து முக சருமத்தில் கரும்புள்ளி, கருவளையம் போன்றவை தோன்றி முகப்பொலிவை குறைக்கும்.
தூங்கும் நேரத்தை குறைப்பதனால் உடலை பாதுகாக்க தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியாமல் பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
போதிய தூக்கமின்மை உடலை மட்டுமல்ல நரம்பு மற்றும் மனம் சார்ந்த உணர்வுகளையும் பாதிக்க கூடியது. தூக்கமின்மையினால் மன குழப்பம் அதிகரித்தல், அதிக மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் உற்சாகமற்ற நிலை போன்றவைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
குறைவாக தூங்கும் பழக்கம் தொடர்ந்தால் ஆரோக்யமற்ற உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நரம்புகள் தூண்டும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இந்த பழக்கம் தொடர்ந்தால் உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
குறைவான நேரம் தூக்கம் அல்லது தூக்கத்தை முற்றிலுமாக துறக்கும் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் பெரும்பாலும் இல்லற வாழ்வில் ஈடுபாடு அற்றவர்களாக இருப்பார்கள் என ஆய்வு சொல்கிறது.
ஒரு நாள் இரவு தூக்கத்தைத் தொலைத்தாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இவ்வாறு தொடர்ந்து ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் இதயம் சார்ந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.