பூசாரி மனு கொடுப்பதற்கு சென்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தம்மநாயக்கன்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் சுப்பிரமணி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்கு சென்றபோது திடீரென அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுப்ரமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர் தம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள முருகன் கோவிலில் பூசாரியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதன்பிறகு சுப்பிரமணி அந்த கோவிலுக்கு சொந்தமான 750 சதுர அடி நிலத்தை அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த மனுவின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமலும், அதிகாரிகள் அங்கு சென்று கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்யாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் தான் இந்த முறை மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டேன் என்று தெரிவித்தார். இதனைக்கேட்ட காவல்துறையினர் சுப்பிரமணியை சமாதானப்படுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பிறகு அவர் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக எழுந்து சென்றார்.