நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகள் மற்றும் வீடுகள் மீதும் விழுந்துள்ளன. மரங்கள் விழுந்ததில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் விழுந்த மரங்களால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, கூடலூர் மற்றும் எமரால்டு, குந்தா பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கன மழையினால் மாயாறு மற்றும் புண்ணம்புழ ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால், கூடலூர், பந்தலூர், உதகை தாலுகா பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை முடியும் வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளர். அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 581 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.