Categories
தேசிய செய்திகள்

நிலுவைத் தொகை செலுத்த 10 ஆண்டுகள் அவகாசம்…!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு உரிமக் கட்டணம் அலைக்கற்றை கட்டணமாக சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் வட்டியுடன் பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இந்த தொகையை செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி நிலுவைத் தொகை செலுத்தாத தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த விசாரணையின் போது தொலை தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பில் கூறப்பட்டது. அப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களை அவமதிப்பு வழக்கில் சிறைக்கு அனுப்ப நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், மக்களின் பணத்தை வாங்கி குவித்துள்ள இந்நிறுவனங்கள் ஒரு சிறு பகுதியை கூட அரசாங்கத்திற்கு செலுத்த முடியாதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதன்படி மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகையை கட்டுவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையில் 10 சதவீதத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். நிலுவைத் தொகை தவணையை ஆண்டுதோறும் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்ட தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

Categories

Tech |