நீண்ட நாட்களாக தொடர்ந்த சண்டைக்கு பிறகு மொசாம்பிக் துறைமுகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றனர். பயங்கரவாதிகள் கடந்த சில மாதங்களாக அந்நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கின்ற நகரங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம் பெயர்ந்துள்ளனர். அந்நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மொசிம்போ டா பிரையா துறைமுகத்தை கைப்பற்ற பயங்கரவாதிகள் பல முறை தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினருடன் நீண்ட நாட்களாக பயங்கரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அந்த துறைமுகத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் அங்கு முற்றுகையிட்டிருந்த பாதுகாப்பு படையினர் படகுகளில் ஏறி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த துறைமுகம், 60 மில்லியன் டாலர் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு அருகில் அமைந்திருப்பதும், எண்ணெய் திட்டங்களுக்கு சரக்குகள் வினியோகம் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்த துறைமுகம் பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியிருப்பது, உள்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு விழுந்துள்ள பலத்த அடியாக கருதப்படுகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் பாதுகாப்பு படைவீரர்களை கொன்றுவிட்டு, மொசிம்போ டா பிரையா துறைமுகத்துக்கு அருகில் அமைந்துள்ள 2 ராணுவ தளங்களை கைப்பற்றியுள்ளதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் அவர்களின் ஆதரவு பெற்றுள்ள பயங்கரவாதிகள் தற்போது மொசிம்போ டா பிரையா துறைமுகத்தை கைப்பற்றிருப்பது அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.