தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான நீர்நிலைகள் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளது. இதனால் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது “நீர்நிலைகளில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். இதனையடுத்து வெள்ளப்பெருக்கு காலங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் மழை மற்றும் வெள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்கக் கூடாது.
இவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதில் பொதுமக்கள் தங்களுடைய ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பிளாஸ்டிக் பைகளில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே ஆறு, ஏரி குளங்களில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அங்கு செல்ல வேண்டாம்.
இதுபோன்ற பேரிடர் காலங்களில் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, ஒரு வார காலத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், கியாஸ், மணெண்ணெய், மருந்து, பால் பவுடர், மின் விளக்குகள், உபரி பேட்டரிகள் மற்றும் சுகாதாரத்தை பேணிகாக்க தேவையானவை, முக கவசங்கள் போன்ற பொருட்களை பொதுமக்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.