கனத்த மழை பெய்ததால் பாலாற்றின் குறுக்கில் கட்டியுள்ள புல்லூர் தடுப்பு அணை நிரம்பி வழிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் அடைந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் அரசு நதிநீர் ஒப்பந்தத்தை மீறி பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பு அணைகள் கட்டப்பட்டது. அதன்படி ஆந்திர மாநில அரசு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லூர் பகுதியில் 5 அடியாக இருந்த தடுப்பு அணையை 13 அடியாக உயர்த்தி கட்டியது. இதனால் விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த கனமழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி தண்ணீர் தற்போது தமிழகத்திற்கு வர தொடங்கி இருப்பதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் புல்லூர் தடுப்பணையில் இருந்து தண்ணீர் வருவதை அறிந்த பெரும்பாலான பொதுமக்கள் அங்கு சென்று பார்த்து செல்கின்றனர். இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை மற்றும் அதிகாரிகள் பாலாற்று ஆற்றுப்படுகை பகுதிகளையும், நீர்வரத்து வரும் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர் . அதன்பின் புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிவதை பார்வையிட்டு தமிழகத்திற்கு தடுப்பணை வழியாக வெளியேறி வரும் நீரை மலர் தூவி வரவேற்றனர்.