நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகின்றது.
கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன.
5 குற்றவாளிகளில் 32 வயதான முகேஷ் குமார் சிங் தூக்கு தண்டனையில் இருந்து கருணை காட்ட கோரிய மனுவை ஜனாதிபதி கடந்த 17ஆம் நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ததோடு , ஜனாதிபதி நிராகரித்ததை நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிடப்பட்டது.
விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் முகேஷ் சிங்கின் வழக்கறிஞர் , மரண தண்டனை தொடர்பான தீர்ப்புகளையும், கருணை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம் குறித்தும் தனது வாதத்தில் தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி கருணை மனுவை தள்ளுபடி செய்த நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்ததாக வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, குற்றவாளிகள் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்றும், குற்றவாளிகளுக்கு ஒரு போதும் கருணை காட்டக்கூடாது என்றும் தெரிவித்தார். இருதரப்பு வாதம் , பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் முகேஷ் சிங்கின் மனு மீதான தீர்ப்பை இன்று வழங்க இருக்கின்றனர்.