டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற 20ம் தேதி காலை 5: 30 மணிக்கு அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய நால்வரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு புறம் குற்றவாளிகள் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க ஒருவருக்கொருவர் என மாறி மாறி சீராய்வு மனுக்கள், மற்றும் கருணை மனுக்களை தாக்கல் செய்து வரும் நிலையில், மற்றொரு புறம் தூக்கிலிட இன்னும் ஒரு நாளே இருப்பதால் திஹார் சிறையில் முன்னேற்பாடு பணிகளை தொடங்கியுள்ளது.
குற்றவாளிகளை தூக்கில் போட உள்ள ஹேங்மேன் பவன் ஜலாத் தூக்கிலிடும் முன்னேற்பாடு பணிக்காக இன்று திகார் ஜெயிலுக்கு வந்திருந்தார். அதனையடுத்து குற்றவாளிகளுக்கு பயன்படுத்தும் தூக்கு கயிறு வலுவாக உள்ளதா? தூக்கு மேடை சரியா இருக்கிறதா? என்பது உள்ளிட்ட அனைத்து ஒத்திகை பணிகளும் நடத்தப்பட்டன.
அதேபோல குற்றவாளிகளின் எடைகொண்ட 4 பொம்மைகள் மூலம் ஜலாத்தை வைத்து இந்த ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இதன்மூலம் நாளை மறுநாள் விடிகாலை இவர்கள் 4 பேரையும் தூக்கிலிடுவது உறுதி என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிறையில் உள்ள இந்த 4 பேருக்கும் தினமும் மெடிக்கல் செக்-அப் மற்றும் மனநல ஆலோசனையும் அளித்து வருகின்றன. நாளை ஒரு நாள் மட்டுமே இருப்பதால் சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிகள் தூக்கிலிடபடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.