Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனைக்கு தடைகோரிய குற்றவாளிகள் மனு தள்ளுபடி!

தூக்கு  தண்டனைக்கு தடைகோரிய நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், முகேஷ் சிங், வினய் ஷர்மா மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான். மேலும் சிறுவன் 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டான்.

இந்நிலையில் மீதமுள்ள குற்றவாளிகள் 4 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கு 8 ஆண்டுகள் கடந்து நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் நால்வருக்கும் இரண்டு முறை தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டு பின் தள்ளிப்போனது. காரணம் குற்றவாளிகள் 4 பேரும் மாறி மாறி சீராய்வு மனு, கருணைமனு என சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தினர். இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Image result for அக்ஷய் குமார் நிர்பயா

இறுதியில் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உத்தரவிட்டார். குற்றவாளிகளுக்கு சீராய்வு மனு, மறு சீராய்வு மனு, கருணை மனு, மேல் முறையீட்டு மனு என நான்கு சட்ட வாய்ப்புகள் இருந்த நிலையில் அக்ஷய் குமார், முகேஷ், வினய்  ஆகியோர் வாய்ப்புகளையும் பயன்படுத்தி விட்டனர். பவன் குப்தாவுக்கு மட்டுமே வாய்ப்புகள் இருந்தது.

இதனிடையே நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தான். இந்த சீராய்வு மனுவை இன்று காலை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இன்னும் அவன் குடியரசு தலைவருக்கு கருணை மனு அளிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் முன்னதாக தூக்கு தண்டனைக்கு தடை கோரி அக்ஷய் குமார், பவன் குமார் குப்தா இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அக்ஷய் குமார், பவன் குமார் குப்தா இருவரும் 4 பேருக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனையை தடை செய்ய கோரிய மனுவை டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

Categories

Tech |