தனது நண்பருடன் ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டகிந்தனப்பள்ளி பகுதியில் கவுரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் இருக்கும் பேக்கிரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வந்த கவுரவன் தனது நண்பரான பெருமாள் என்பவருடன் பொத்தான் குட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார்.
அந்நேரம் இருவரும் மது அருந்திவிட்டு ஏரியில் குளித்த போது மறுகரைக்கு யார் முந்தி செல்கிறார்களோ அவருக்கு 1000 ரூபாய் என பேசி பந்தயம் கட்டி ஏரியில் நீந்தி சென்றுள்ளனர். அதன்பின் பெருமாள் மட்டும் கரையை அடைந்துள்ளார். அப்போது அவர் போட்டியில் வெற்றி பெற்று ஆயிரம் ரூபாய் வென்றதாக கருதிய நிலையில் நீண்ட நேரமாகியும் கவுரவன் கரை ஏறவில்லை. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெருமாள் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கிய கவுரவனை ரப்பர் படகு மூலமாக தேடி சடலமாக மீட்டுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.