கண்டெய்னர் லாரி மோதி எம்.ஜி.ஆர். சிலை சேதம் அடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 3 ரோடு சந்திப்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை கடந்த 25 வருடங்களாக இருக்கின்றது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஒரு கண்டெய்னர் லாரி சிலையின் பீடத்தின் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் எம்.ஜி.ஆர். சிலையின் கை உடைந்து சேதமடைந்தது. இதனையடுத்து சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. ஜெயசங்கரன் காரில் சென்றுள்ளார்.
அப்போது எம்.ஜி.ஆர். சிலை சேதம் அடைந்ததைக் கண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள செல்லாமல் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின் அவரது தலைமையில் சம்பவ இடத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் திரண்டு வந்து, உதவி கலெக்டர் சரண்யா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகரன் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமரா காட்சிகளை மூலம் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியின் டிரைவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.