சீன நிறுவனங்களுக்கு தடைவிதித்து அதனை அமெரிக்கா அடக்க முயற்சிப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கிடையே கடல் பிரச்சனை, வர்த்தகம், முஸ்லிம்களின் மீது மனித உரிமை மீறல் மற்றும் கொரோனா வைரஸ் போன்ற பலவிதமான காரணங்களால் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டிரம்ப் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி சீனாவினுடைய பலவிதமான செயலிகளுக்கு தடை விதித்தார்.
அதோடு மட்டுமின்றி ட்ரம்ப் அமெரிக்க தொழிலதிபர்கள், 31 சீன நிறுவனத்திடமிருந்து பங்குகளை வாங்குவதற்கும் தடை விதித்தார். இதனால் சீன நிறுவனங்களின் பங்குகள் மிகவும் கடுமையான சரிவை சந்தித்தது. இந்நிலையில் தற்போது சீன நிறுவனங்களின் தடை பட்டியலை மறு ஆய்வு செய்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதிதாக 28 சீன நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளார். இதனால் சீன நிறுவனங்களின் தடை பட்டியல் 59 ஆக அதிகரித்தது. இதனையடுத்து ஜனாதிபதியின் இந்த தடை உத்தரவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா இதற்கான தகுந்த பதிலடியை கொடுப்போம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அமெரிக்கா சந்தை சட்ட விதிமுறைகளை மீறுவதாகும், சீன நிறுவனங்களை அடக்குவதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பதாகவும் சீன வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறையின் செய்தியாளர் கூறியதாவது, அமெரிக்கா இந்த தடை பட்டியலை உடனே நீக்க வேண்டும் என்றும், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களினுடைய நலன்களை கருத்தில் கொண்டு சீனா அதிரடியான நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.